விருதுநகர்:
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர். அவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி நிலையங்களும், பட்டாசு கடைகளும் களைகட்டியுள்ளன. குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இன்று காலை சிவகாசி விருதுநகர் புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீபாவளி விற்பனைக்காக கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு வீரர்கள் பக்கத்தில் நெருங்க முடியவில்லை.
பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதை அடுத்து கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். கிடங்கில் இருந்து பட்டாசு ஏற்றப்பட்ட சரக்கு லாரி முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. மேலும் கிடங்கில் தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.
தீப்பிடித்துள்ள பட்டாசு கிடங்கின் தனியாருக்கு சொந்தமான ஸ்கேன் மையம் உள்ளது. இன்று ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர். அருகில் ஏற்பட்ட தீ விபத்தால் அவர்கள் அதில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
தீ படிப்படியாக அருகிலிருந்த ஸ்கேன் சென்டருக்கும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறித்துடித்தனர். இதில் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் சென்டரின் பின்பக்க ஜன்னலை உடைத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல் கிடங்கிற்கு அருகே இருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இந்நிலையில் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிகிறது.