சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் சிலை  அகற்றம்

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை நேற்று இரவு காவல்துறையினர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலை நிறுவப்பட்டு இருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த சிலையை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு  சிலையை அகற்றும் பணி தொடங்கியது.

அங்கிருந்து சிலையை அகற்றக்கூடாது என்றும், அகற்றினால் அதே கடற்கரை சாலையில் வைக்க வேண்டும் என்றும் சிவாஜி ரசிகர் மன்ற அமைப்புகள் சில போராட்டங்கள் நடத்தி வந்தன.

ஆகவே சிலையை அகற்றும் முன்பு அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  முதல் கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகளை  காவல்துறையினர் அமைத்தனர்.  பிறகு சிலையை அகற்றும் பணி துவங்கியது.  அதிகாலையில்  சிலை அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட இந்த சிலை,  அடையாறில் அமைக்கப்பட்டு வரும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.

 
English Summary
sivaji ganesan statue removed