ராஜ்கிர், பீகார்
சீதாராம் யெச்சூரி ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றித் தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணி அமைத்துள்ளன. ஆயினும் மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியில் தங்கள் கட்சி இடம் பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
பீகார் மாநிலம் பீகார் ஷெரீப் மாவட்டம் ராஜ்கிர் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
“வரும் மக்களவைத் தேர்தலுக்கான ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளிடையே எந்த சர்ச்சையோ, கருத்து வேறுபாடோ இல்லை மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கருத்தொற்றுமையுடன் உள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்தன. அதற்குப் பிறகுதான் மன்மோகன்சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இது போல் தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
நமது ஒரே இலக்கு, பா.ஜ.கவை தோற்கடிப்பதுதான். பாஜக மதச்சார்பற்ற ஓட்டுகளின் பிளவால் பலன் அடைவதை அனுமதிக்க மாட்டோம். பாஜக உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறது. ஆகவே, இந்த நேரத்தில், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் தீவிரமாக எழுப்ப வேண்டும்.
எனத் தெரிவித்துள்ளார்.