கோயம்புத்தூர்
ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை பிடித்ததையொட்டி அங்குள்ளோர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓட முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள இந்தியர்கள் கடும் அபாயத்தில் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்கப் பலரும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோயம்புத்தூரில் நேற்று மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டம் தொடங்கி இரு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்ற பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, செய்தியாளர்களிடம், “விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் இருக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரமாக்கா வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அது சாத்தியமில்லை என தற்போது தெளிவாகி உள்ளது. தடுப்பூசி தயாரிக்க மேலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் பொருளாதார தேக்கம் வேலையின்மை அதிகரித்துள்ளன. பல சிறு குறு தொழில்கள் நடக்கும் கோவை போன்ற பல இடக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களில் விலையைக் குறைக்க பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உடனடியாக குறைக்க வேண்டும்.
மத்திய அரசு ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்கத் தவறி விட்டது. இதற்குச் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் ஆகும். நாடெங்கும் உள்ள 126 இடங்களில் பாஜக அமைச்சர்கள் பாதயாத்திரை செல்வதால் கொரோனா மேலும் பரவும். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மத்திய அரசைக் கண்டிக்கும் போராட்டங்களை தீவிரமாக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.