சென்னை: சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம் என்றும், சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.  சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும்  வகையில், சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும், ‘சிற்பி’ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து, இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளை வழங்கி வாழ்த்தினார். சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், இன்று (செப்.14) சிறார் குற்றங்களுக்குத் தீர்வு காணும், பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய முதலமைச்சர், சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம்,  சிறுவர்களை சமூக பொறுப்பும், ஒழுக்கமும் மிக்கவர்களாக சிற்பி திட்டம் மாற்றும். மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிற்பி திட்டத்தை தமிழக காவல்துறை முன்னெடுத்துள்ளது. சிறார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலையே காரணமாக உள்ளது. காவல்துறையும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சை மதித்து நடப்பது உள்ளிட்ட பண்புகளை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.

சிறார்கள் குற்றங்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைந்துள்ளன” என்று கூறிய முதலமைச்சர்   ” காவல்துறையை மக்களின் நண்பன் என்று கூறுகிறோம். அதற்கேற்ப மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். என்னுடைய எண்ணம் மட்டுமல்ல எல்லோருடைய எண்ணமும் அப்படியாகத்தான் இருக்கும்.

காவல்துறையும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால், குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் மக்களையும் காவல்துறையையும் ஒன்றிணைக்கக்கூடிய எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டுள்ளது. அத்தகைய நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்களைப் போல இதுவொரு முக்கியமான திட்டமாக, ” சிற்பி” என்ற புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு காவல்துறை இன்று உருவாக்கியிருக்கிறது. இதன் பொருள் (Students In Responsible Police Initiatives) SIRPI. எனவே சிற்பி என இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிற்பி என்ற இந்த திட்டம் பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கக்கூடிய திட்டம். இத்திட்டத்தை கடந்த 13.9.2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன். சுமார் 4 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நான் அறிவித்தேன்.

சென்னை மாநகரில் உள்ள 100 அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த திட்டம் இன்று நிறைவேற்றப்படுகிறது. சிறுவர்களை இளமைக் காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூக பொறுப்புள்ளவர்களாகவும் உருவாக்க இந்த திட்டம் பயன்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிறார்கள் குற்றங்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் காரணமாக அமைந்துள்ளன.

இவ்வாறு கூறினார்.