சென்னை: சென்னையில் உள்ள பள்ளிகளில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முழவதும் காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இன்று சென்னையில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. சென்னை மாநகரம் உள்பட மாநிலங்களில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், அதிகரித்து வரும் சிறார் குற்றங்கள், சிறார் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் வகையிலும் சென்னை மாநகர காவல்துறையின் சார்பில், முதற்கட்டமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு சிற்பி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த ‘சிற்பி’ என்னும் புதிய திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், 8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.