கொழும்பு

இலங்கையில் தமிழ் நீதிபதியை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள அதிபர் மைதிரிபாலா சிரிசேனா உத்தரவிட்டுள்ளார். அதோடு நீதிபதிகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதிளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை உடனடியாக மேலும் பலப்படுத்த அவர் ஐ.ஜி புஜித் ஜெயசுந்தராவுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ் நீதிபதி இளஞ்செழியனை சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த போலீஸ்கார் சரத் பிரேமசந்திரா குடும்பத்திற்கு சிரிசேனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் நீதிபதிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவரது பாதுகாப்பு அதிகாரி மட்டும் மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தார். நல்லூர் சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நீதிபதியின் கார் சிக்கிக் கொண்டபோது இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் கூறுகையில், ‘‘இது என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான். எனது காரை நெருங்கி வந்த ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட முயன்றார். எனது பாதுகாப்பு அதிகாரி நீணட நேரம் போராடி அந்த நபரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார்’’ என்றார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாப்னா டவுன் பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஜாப்னா வக்கீல்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள், பல அரசு துறை அலுவலர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2015ம் ஆண்டில் மாணவி சிவலோகநாதன் வித்யா கற்பழித்து கொலை செய்யப்ப்ட வழக்கை நீதிபதி இளஞ்செழியன் விசாரித்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், கடந்த வாரம் ஒரு துணை போலீஸ் ஐ.ஜி.யை கைது செய்து சிறையில் அடைக்க இந்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]