மும்பை: ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது தந்தை இந்தியாவில் இறந்துவிட்டாலும்கூட, நாடு திரும்பாமல், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

முகமது சிராஜின் 53 வயதான தந்தை, உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். ஆனால், சிராஜ் தற்போது இருப்பதோ ஆஸ்திரேலியாவில். இந்நிலையில், அவர் நாடு திரும்புவதற்கான வாய்ப்பை அளித்தது பிசிசிஐ. ஆனால், அதை மறுத்து, அவர் அங்கேயே தங்கியிருந்து போட்டிகளில் பங்கேற்க முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “முகமது சிராஜின் தந்தை, கடந்த வெள்ளியன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். எனவே, முகமது சிராஜுடன் கலந்துரையாடிய பிசிசிஐ, அவர் விரும்பினால் நாடு திரும்பி, துன்பத்தில் சிக்கியிருக்கும் அவருடைய குடும்பத்தினருடன் இருக்கலாம் என்ற வாய்ப்பு அவருக்கு தரப்பட்டது.

ஆனால், அவர் அந்த சலுகையை மறுத்து, தொடர்ந்து நாட்டுக்காக விளையாட முடிவுசெய்துள்ளார். இந்தத் துயரத்தை அவருடன் பகிர்ந்து கொள்கிறது பிசிசிஐ மற்றும் இந்த இக்கட்டான சூழலில் அவருக்கான ஆதரவையும் வழங்குவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை நாடு திரும்பிவிட்டால், கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பு, மீண்டும் கிடைக்காது என்ற எண்ணமே, அவரின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்!