டில்லி:

நாட்டில் நிலவும் நிதி நீர் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் காவிரி பிரச்சினை, கர்நாடகாவில் மகதாயி  நதிநீர் பிரச்சினை, கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்சினை போன்று பல்வேறு மாநிலங்களில் நதிநீர் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

இநந்நிலையில்,  கொல்கத்தாவில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்  தலைமையில் 5 மாநிலங்களின் நீர் ஆதாரத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேசிய அளவில் அமையவிருக்கிற நடுவர் மன்றம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதோடு நீர் பாசன வசதிகளையும் ஏற்படுத்தும் என தெரிவித்தார்.  நாடு முழுவதும் நிலவக்கூடிய நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடுவர்மன்றங்களுக்கு பதிலாக தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்றும்,  காவிரி, நர்மதை, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு பதிலாக ஒரே ஒரு நதிநீர் நடுவர் மன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

இதற்கான   சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும்,  மேலும் தேசிய அளவிலான நடுவர் மன்றம் செயல்பாட்டிற்கு வரும்போது அதன் தீர்ப்பை இறுதியானதாக இருக்கும் என்றும் அதனை மாநில அரசுகள் கட்டாயம் அமல்படுத்தி ஆக வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசத்தின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.