ஒத்தையடி பாதை – கவிஞர் ராஜ்குமார் மாதவன்
ஊழல்கள் இல்லை
இயந்திரங்கள் இல்லை
ஊதியங்கள் இல்லை
இயற்கை அழியவில்லை
காடுகரைகளில்
ஒத்தையடி பாதை!
சொல்லும் நீதி தானென்ன ?
நிதி இல்லை
நிலமும் இல்லை
நாற்காலி தானும் இல்லை
நாற்புறம் சுவருமில்லை
இருந்தும் பள்ளி கண்டார்
கர்ம வீரர் காமராசர்
அது கல்விக்கண் திறந்த
ஒத்தையடி பாதை!
ஒழுகா வீட்டில
தானிய கிடங்கில்ல
விளைந்ததை விக்கமுடியல
விற்றதை வாங்கி உண்ணமுடியல
மிட்டா மிராசு தயவுல
வாழ்க்கை ஓடியபொழுதில
ரேஷன் கடை கண்டதால
சுயமரியாத பெற்றோம் தன்னால
அது தமிழன் தன்மானம்
காத்த ஒத்தையடி பாதை !
அடுப்பூதும் பெண்ணுக்கு
படிப்பதெர்கின்னாங்க?
பிள்ளை பேரு காண்பதற்கு
பள்ளியறை போதுமினாங்க
பெண்டிப்பிள்ளைக்கு
சொத்துசுகம் எதுக்குன்னாங்க?
பின்னாளில் ,
எட்டாம் வகுப்பு படிச்சாலே
கல்யாண ஊக்கத்தொகை தந்தாக!
பெற்றோர் சொத்தில்
சரிபாகம் தந்தாக !
ஆட்சியிலும் பெண்
ஒதுக்கீடு தந்தாக !
அது பெண்ணுரிமைக்கான
ஒத்தையடி பாதை !
ஊரெல்லாம் பஞ்சம்
பணமோ சிலரிடம் தஞ்சம்
அவங்க அமைச்ச வங்கி
அரசுடமை ஆக்கிய அன்னை
இந்தியா கண்ட இந்திரா
மக்கள் முன்னேற்றத்திற்கு
வங்கி தேசியமயமாக்கல்- ஒரு ஒத்தையடி பாதை !
இந்த பல பாதைகள் சேர்ந்ததே
நவீன இந்திய
எல்லா முன்னேற்றத்துக்கும் முன்னோடி
ஒரு ஒத்தையடி பாத தான்.
ஒப்பந்தங்கள் இல்லை
ஊழல்கள் இல்லை
இயந்திரங்கள் இல்லை
ஊதியங்கள் இல்லை
இயற்கை அழியவில்லை
காடுகரைகளில்
ஒத்தையடி பாதை!
சொல்லும் நீதி தானென்ன ?