புதுடெல்லி:
நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வைரத்துக்கு ஜிஎஸ்டி 1.5 சதவீதமாகவும், மருத்துவக் காப்பீட்டுக்கு 18 சதவீதமாகவும், மருத்துவமனை அறைகளுக்கு 5 சதவீதமாகவும் நிா்ணயித்துள்ளனா். ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் இந்தச் செயலை வரி விதிப்பு என்று கூற முடியாது. வரிக் கொள்ளை என்றுதான் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்துப் பொருள்கள், சேவைகளுக்கும் சமமான குறைந்த வரி விகிதத்தை மத்திய அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம்தான் ஏழை, நடுத்தர மக்களின் வரிச் சுமையைக் குறைக்க முடியும். மத்திய அரசு தங்களுக்கு சாதகமானவா்களுக்காக வரி விகிதத்தை மாற்றி அமைக்கிறது. இதனால், எளிய, நடுத்தர மக்களுக்கு வரிச் சுமை அதிகரிக்கும் என்பது குறித்து அரசு கவலைப்படுவதில்லை’ என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளாா்.