டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று பாராலிம்பிக்ஸ் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. அதே வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 54 பேர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இந்தியாவுக்கு, 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற . ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா 216.8 மதிப்பெண்களைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதனால், இந்தியா தனது பதக்க பட்டியலில் 8 வது பதக்கத்தை சேர்த்துள்ளது. இந்தியாவுக்கு இன்று கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
அதேவேளையில், பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் பதக்க வாய்ப்பை இழந்தார். ஏற்கனவே நடைபெற்ற எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் உலக சாதனை படைத்த ரூபினா பிரான்சிஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால், அதன்பின்னர் நடைபெற்ற பி 2 மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் 128.5 புள்ளிகளுடன் 7 வது இடத்தைப் பிடித்தார். இதனால்,பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.