சென்னை: ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை குறித்த எஸ்.வி.சேகர் பேச்சுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
எஸ்வி சேகர் ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பிளஸ்2 மாணவி பாலியல் கொலை செய்யப்பட்டது குறித்து பேசி இருப்பது, அவரது எதேச்சதிகார மனநிலையை பிரபலிக்கிறது.

தூத்துக்குடி விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேவையற்ற வகையில் கருத்து கூறிய சர்ச்சைக்கு பெயர்போன S.V. சேகருக்கு பாடகி சின்மயி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து எஸ்வி சேகர் மன்னிப்பு கோரியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான சூழலில், நடிகர் எஸ்.வி.சேகர் இதுகுறித்து தெரிவித்த கருத்துகள் தற்பொழுது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி எதற்காக வனப்பகுதிக்குள் இருந்த புதர்களுக்குப் பின்னால் சென்றார் என்றும், காவல்துறை எல்லா இடங்களிலும் வந்து வெளிச்சம் பாய்ச்ச முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து பிரபலமான, பாடகி சின்மயி, தற்போது எஸ்வி சேகரையும் கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், இந்தியாவில் கழிப்பறை வசதி இல்லாத சூழலில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகப் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படிச் செல்லும் தருணங்களில் அவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது என்பது துரதிர்ஷ்டவசமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு கசப்பான உண்மையாகும்.
தங்களுக்கு விருப்பமான இடத்தில், பாதுகாப்பாகத் தங்கள் ஆடையின் ஜிப்பை மட்டும் கழற்றிவிட்டு சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால், பெண்களின் இந்த அடிப்படைப் பாதுகாப்பு சார்ந்த வலியை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவில், யாரையும் குறிப்பாக இறந்து போனவர்கள் பற்றி தவறாக பேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக அறிகிறேன். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]