சென்னை:

மீடு புகழ் பாடகி சின்மியி, தலைமை நீதிபதி மீதான பாலியல் விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளார். சென்னையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். இதற்காக சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியர் பாலியல் தொல்லை புகார் அளித்தார். இதற்கு இந்திய பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்த நிலையில், புகார் தொடர்பாக நீதிபதி பாப்டே தலைமையில் விசாரணை குழு விசாரணை நடத்தியது. அதையடத்து, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி  வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து  டில்லியில் உச்சநீதி மன்றத்திற்கு வெளியே,  ரஞ்சன் கோகாய் மீதான  பாலியல் புகார் தொடர்பாக, பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 2 நாட்களாக பெண்ணியக்கவாதிகள், ஒருசில வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரபல பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல பாடகி சின்மயி சென்னையில் தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு சென்னை காவல்துறையிடம்  அனுமதி கேட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறை யில் அனுமதிக் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அவருக்கு போராட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.