சென்னை : சென்னையில், பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்அட்டை மூலம் பயணம் செய்யும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். விரைவில் இந்த அட்டை மூலம் மின்சார ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், பதவிக்காலம் முடிந்தும் அதில் ஒட்டிக்கொண்டு இருப்பது அவருக்கு அழகில்லை என்றும் விமர்சித்தார்.
சென்னையில், பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ‘சிங்கார சென்னை’ என்ற பெயரிலான ஒன்சிட்டி ஒன் கார்டு என்ற பயண அட்டை திட்டத்தை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
பயணிகள் டிக்கெட் எடுக்க காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், எளிதாக ஸ்வைப் செய்து பயணிக்கும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பயண அட்டையில், நாம் குறிப்பிட்ட அளவு பணத்தை ரீசார்ஜ் செய்துகொண்டால், இதன்மூலம், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அடுத்தடுத்து நாம் எளிதாக பயணிக்க முடியும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சிங்காரச் சென்னை ஸ்மார்ட் கார்டு (ஒன்சிட்டி ஒன் கார்டு) ஸ்டேட் வங்கி மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 50,000 ஸ்மார்ட் அட்டைகள் கட்டணமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு விற்பனை மையங்களில் ஸ்மார்ட் அட்டைகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளன. விரும்பும் பயணிகள் இதை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாநகர பேருந்து, நடத்துநர்கள், ஆன்லைன் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களில் ஸ்மார்ட் அட்டையை ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை ஒன்சிட்டி ஒன் கார்டு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயில்கள் மட்டுமின்றி இனி சென்னை மாநகரப் பேருந்துகளிலும் இனி பயணிக்கலாம். விரைவில் மின்சார ரயில்கள், விரைவு ரயில்களிலும் ஸ்மார்ட் அட்டை திட்டத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியதுடன்,, தேசப்பற்று குறித்து எங்கள் தலைவர்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி ஆளுநருக்கு இல்லை. ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. பதவிக்காலம் முடிந்தும் அதில் ஒட்டிக்கொண்டு இருப்பது அவருக்கு அழகில்லை என சாடினார்.
பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்: ‘ஒன் சிட்டி ஒன் கார்டு’ திட்டம் இன்று தொடக்கம் !