சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரது அரசியல் வாரிசு யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
கிழக்கு ஆசியாவின் பொருளாதார வலிமை மிகுந்த குட்டி நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரின் பொருளாதார வலிமைக்கு அதன் ஸ்திரத்தன்மை வாய்ந்த அரசியலும் ஒரு காரணம்.
Singapore's Prime Minister Lee Hsien Loong
சமீபத்தில் நடைபெற்ற தேசிய தினப் பேரணியில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் திடீரென்று மயங்கி விழுந்தது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல்நிலை குறித்த கவலைகள் ஒரு பக்கம் இருக்க, அவரது அரசியல் வாரிசு யார் என்பது போன்ற கேள்விகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரு கின்றன.
சம்பவத்தன்று சிறிதுநேர ஓய்வுக்குப் பின்னர் பிரதமர் லீ மறுபடியும் வந்து பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் தமது பேச்சைத் தொடர்ந்தார்.
அவரது உடல்நிலை குறித்த தெளிவான அறிக்கையும் அரசால் உடனே வெளியிடப்பட்டுவிட்டது. பிரதமருக்கு லேசான மயக்கம்தான் என்றும் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததும் உடலில் நீர்ச்சத்து குறைந்ததுமே மயங்கி விழுந்ததற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரதமரின் உடல்நிலை குறித்த பரபரப்புகள் அடங்கினாலும், இன்னொரு பக்கம் அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தின் பெயர் உட்பட, நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட்,  அமைச்சர் சாங் சுங் சிங் என்று பலரின் பெயர்களும் விவாதிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரின் சிற்பியும் இன்றைய பிரதமர் லீயின் தந்தையுமான லீ குவான் இயூ தனக்குப் பின்னர் சரியான தலைமையை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் இப்போதைய சூழல் அப்படி இல்லை.
வெளிநாட்டினர் சிங்கப்ரிபூல் அதிகம் முதலீடு செய்யக்காரணம் அங்கு நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மைதான். அது பாதிக்கப்படும் பட்சத்தில் அதன் தாக்கம் சிங்கப்பூரின் சந்தைப் பொருளாதாரம் வரை எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் லீ ஆரோக்கியமாக இருப்பது தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் அரசியல் வாரீசு குறித்த ஆராய்ச்சிகளும், விவாதங்களும் தேவையற்றது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.