சிங்கப்பூர்
சிங்கப்பூர் அரசு பொதுமக்களுக்கு இலவசமாக 52 லட்சம் முக கவசங்கள் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
சீனாவின் ஊகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உலக நாடுகளிலும் பரவி வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் தாக்குதலுக்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவில் பல நகரங்கள் இந்த வைரசால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
இந்த வைரஸ் தாக்குதலையொட்டி உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சிங்கப்பூரில் இதையொட்டி அறுவை சிகிச்சை சமயத்தில் பயன்படுத்தும் முக கவசங்கள் ஏராளமாக விற்பனை ஆகி உள்ளன. கடந்த 9 நாட்களில் மட்டும் சிங்கப்பூரில் 50 லட்சம் முக கவசங்கள் விற்பனை ஆகி உள்ளன.
சிங்கப்பூர் அரசு நாட்டில் உள்ள சுமார் 13.7 லட்சம் வீடுகளுக்கு சுமார் 52 லட்சம் முக கவசங்கள் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது கடைகளில் முக கவசங்கள் மும்முரமாக விற்பனை ஆவதால் நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசுத் தகவல் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் ஆயுதக் காவல் படையினர் மற்றும் மக்கள் சங்கத்தினர் இணைந்து இந்த இலவச முகக் கவசங்களை வழங்க உள்ளன. இதற்காக முகக் கவசங்களை சிங்கப்பூர் அரசு பெருமளவில் சேகரித்து வருகிறது. இந்த கவசங்கள் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.