வாஷிங்டன்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிசஸ் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவின் ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது முதலில் கண்டறியப்பட்டது.   அதன் பிறகு அந்த வைரஸ் சீனாவின் பல நகரங்களிலும் பரவத் தொடங்கியது.   இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.   அதையொட்டி சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு வரும் பயணிகளிடம் விமான நிலையத்தில் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் குறித்து உலகெங்கும் மருத்துவ அவசர நிலையை அறிவிக்க உல்க சுகாதார மையத்திடம் கடந்த வாரம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   ஆனால் இந்த வைரஸ் தாக்குதல் சீனாவில் மட்டுமே அதிக அளவில் உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்தது.   அப்போது சீனாவில் 600 பேர் இந்த வைரசால்  பாதிக்கப்பட்டதாகவும் 17 பேர் மரணமடைந்ததாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால் ஒரே வாரத்தில்  கொரோனா வைரஸ் 6000 பேருக்கு மேல் தாக்கி உள்ளதாகவும் 132 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது குறித்து உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிசஸ் டிவிட்டர் மூலம் செய்திகள் வெளியிட்டுள்ளார்.  நேற்று வெளியான அந்த செய்திகளில் சீனாவுக்கு வெளியே 68 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் சீனாவைத் தவிர வேறு சில நாடுகளில் 6000 பேர் வரை பரிசோதனையில் உள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.

எனவே இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை ஒரு அவசரக் கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசரக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதைப் பற்றியும் உலகெங்கும் மருத்துவ அவசர நிலையை அறிவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டெட்ரோஸ் இந்த வைரஸ் தொற்று சீனாவில் இருந்து வந்தவர்கள் மூலமாகப் பரவி வருவதாகவும் அத்துடன் ஒருவருக்கொருவர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 5ல் ஒருவருக்கு கடுமையான நிமோனியா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.