சிங்கப்பூர்,

பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கிறிஸ்தவர்கள், யூதர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் மசூதி இமாம் நல்லா முகமது அப்துல் ஜமீல் அப்துல் மாலிக் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இவர் ஜம்மா சுலியா மசூதியில் தலைமை இமாமாக கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இ ந்தியரான இவர் கடந்த ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை மசூதியில் நடந்த தொழுகையின் போது கிறிஸ்தவர்கள், யூதர்களுக்கு எதிராக இருக்க எங்களுக்கு உதவுங்கள்’’ என்று பேசியதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை நல்லா முதலில் மறுத்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார். சிங்கப்பூரின் பல இன, பல மத கோட்பாடுகளின் படி இமாமின் பேச்சு ஏற்புக்குறியதல்ல. அவருக்கு 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதோடு அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ‘‘எந்த மத தலைவர், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இது போன்று பேசினால் நடவடிக்கைக்கு உட்பட்டவர்களே’’ என்று தெரிவித்துள்ளது.

‘‘பிரிவினை வாத பேச்சு தொடர்பான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. சமயங்களில் நடவடிக்கை எடுக்க கடினமாக இருந்தாலும் எடுத்தாக வேண் டும்’’ என்றும் நீதமன்றம் தெரிவித்துள்ளது.

‘‘நான் சிங்கப்பூர் சட்டத்தை மதிக்கிறேன். நான் உங்களை காயப்படுத்திவிட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய செயலுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்’’ என்று நல்லா கருத்து தெரிவித்ததாக உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.