புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா கூறி உள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் 6 பேர் கொண்ட குழு புதுச்சேரி வந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள், வருமானவரி அதிகாரிகள் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா பேசியதாவது: கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளிடம் மனுக்களும் பெறப்பட்டன.
வாக்காளர்கள் பலர் விடுபட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் கூறியுள்ளனர். விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்கலாம். ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர்கள் தான் வாக்களிக்க முடியும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள், ரவுடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர்களும் தபால் வாக்கு அளிக்க பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.