படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர்.

அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிடுகின்றனர்.

இந்திய குடியுரிமையை கைவிடுவதற்கு இவர்களுக்கு இதுவரை இருந்துவந்த நடைமுறையை தற்போது ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் எளிதாக்கியுள்ளது மத்திய அரசு.

2015 முதல் 2019 வரை 6.7 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, 2018 ம் ஆண்டு முதல், எதற்காக வெளிநாட்டு குடியுரிமை பெற்றீர்கள் ? என்றும், ஏன் இந்திய குடியுரிமையை கைவிடுகிறீர்கள் ? என்ற கேள்வியையும் விண்ணப்பத்தில் இணைத்திருந்தது.

2015 ஆம் ஆண்டில் 1,41,656 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர், 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை முறையே 1,44,942, 1,27,905, 1,25,130 மற்றும் 1,36,441 ஆக இருந்தது.

இந்திய குடியுரிமையைக் கைவிடுவோரின் எண்ணிக்கையில் பெரியளவில் எந்தவித மாற்றமும் இல்லாத போதும், அவர்களின் ஆவணங்களை சரிபார்ப்பதற்கு எளிமையாக தற்போது ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களின் கோரிக்கை 60 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ள அரசு.

இந்திய குடியுரிமையை கைவிட ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து இந்தியாவில் இருக்கும் பட்சத்தில் மாவட்ட நீதிபதியிடமும், வெளிநாடுகளில் இருப்பவர்கள் அருகில் உள்ள இந்திய தூதரகத்திலும் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியுரிமையை கைவிடும் நபரின் 18 வயதுக்குக் குறைந்த (மைனர்) குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் இந்த மூலம் இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ள அரசு, ரத்து செய்யப்பட்ட ஓராண்டுக்குள் அவர்கள் 18 வயதை பூர்த்தி செய்தால், அவர்கள் உடனடியாக இந்திய குடியுரிமை கோர தகுதியுடையவர்கள் ஆகின்றனர் என்று விளக்கமளித்துள்ளது.

எனினும், பெற்றோர் இருவரில் ஒருவர் மட்டுமே குடியுரிமையை விட்டுக்கொடுக்க விண்ணப்பிக்கும் நபர்களின் பிள்ளைகளின் நிலை குறித்து இதில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.