காங்டாக்

சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி பெற்ற நிலையில் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, பா.ஜ.க., சிக்கிம் ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.

வாக்குகள் இன்று எண்ணப்பட்டநிலையில் பெரும்பான்மைக்கு 17 தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி 1 தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் 31 தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆட்சியை தக்கவைத்ததன் மூலம் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றிபெற்றதை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த மாநிலத்தில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றியடையாமல் படு தோல்வி அடைந்துள்ளது.