ரோம்
உலகின் 100% இயற்கை உணவுகள் நிறைந்த மாநிலமாக ஐநா சபை சிக்கிம் மாநிலத்தை தேர்வு செய்துள்ளது.
ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய துறை உலகில் இயற்கை உணவுகள் அதிகமாக உள்ள மாநிலங்கள் குறித்த போட்டி ஒன்றை நடத்தியது. இந்த போட்டியில் உலகின் 25 நாடுகளில் உள்ள 51 மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் விவசாய முறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் ஆராயப்பட்டன.
இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் உலகில் இயற்கை உணவுகள் 100% உள்ள மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ரோம் நகரில் ஐநா சபை நடத்திய ஒரு விழாவில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநில குடியரசு முன்னணி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்தாஸ் பால் மற்றும் ரோம் நகர இந்திய தூதர் ரீனத் சந்து ஆகிய இருவரும் பரிசை பெற்றுக் கொண்டனர்.
”இந்த பரிசு கிடைக்க முக்கிய காரணம் இம்மாநில விவசாயிகள் முழுக்க முழுக்க ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை உபயோகப்படுத்தாததே ஆகும். அத்துடன் இவைகளை உபயோகப்படுத்த தடை விதித்துள்ள அரசுக்கும் இந்த பெருமையில் பங்கு உண்டு. அத்துடன் மாநிலத்தின் இயற்கை விவசாய முறைகளால் கடந்த 2014-17 ஆண்டுகளில் உற்பத்தி 50% அதிகரித்துள்ளது.” என பிரேம்தாஸ் தெரிவித்துள்ளார்.