காங்டாக்

தொடர்ந்து ஐந்து முறையாக சிக்கிம் முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங் தற்போது தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

சிக்கிம் மாநில சட்டப்பேர்வையில் 32 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தை சிக்கிம் ஜனநாயக அணி என்னும் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்தக் கட்சியின் தலைவரான பவன் குமார் சாம்லிங் மாநிலத்தின் முதல்வராக கடந்த 1994 டிசம்பரில் இருந்து ஐந்து முறை தொடர்ந்து 24 வருடங்களாக பதவி வகித்து வந்தார்.

கடந்த 2013 ஆம் வருடம் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா என்னும் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்குமிடையில் பலத்த போட்டி இருந்தது. நேற்று இந்த மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் கட்சியான சிக்கிம் ஜனநாய கட்சிக்கு 15 இடங்களும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. இதை ஒட்டி சிக்கிம் ஜனநாயகக் கட்சி ஆட்சியை இழந்தது. ஆயினும் அக்கட்சி தலைவர் பவன் குமார் சாம்லிங் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.