அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய குடிமக்களை கை கால்களில் விலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர்.
இதுவரை மூன்று விமானங்களில் வந்து இறக்கப்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதில், முதல்கட்டமாக அமிர்தசரஸ் விமான நிலையம் வந்து இறங்கிய இவர்களில் சீக்கியர்கள் யாரும் தலைப்பாகை அணியாமல் இருந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்து இறங்கிய இரண்டாவது விமானத்தில் இருந்த நாடுகடத்தப்பட்ட சீக்கியர்களுக்கு ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC)யைச் சேர்ந்தவர்கள் தலைப்பாகை கொடுத்து வரவேற்றனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக SGPC உறுப்பினரும் முன்னாள் பொதுச் செயலாளருமான குர்சரண் சிங் கிரேவால் கூறுகையில், தலைப்பாகை இல்லாமல் சீக்கியர்களை நாடு கடத்துவது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை எழுப்பியிருக்க வேண்டும். இந்திய அரசு இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை என்றால், எஸ்ஜிபிசி, அமெரிக்க அரசிடம் இது குறித்து எடுத்துச் சொல்லும்” என்றார்.
இதுதொடர்பாக, சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் பிக்ரம் சிங் மஜிதியாவும் அமெரிக்க அதிகாரிகளை விமர்சித்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்த விவகாரத்தை உடனடியாக அமெரிக்க அதிகாரிகளிடம் கொண்டு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் மஜிதியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த தீவிரமான பிரச்சினையில் இந்திய அரசு சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சீக்கிய சமூகத்தின் மத அடையாளம் மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகள் மீது வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் அடக்குமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.