சண்டிகர்:
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஃபேஸ்புக் நண்பருடன் கர்தார்பூர் வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்ற சீக்கிய இளம்பெண், பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குருநானக்கின் 550வது ஜெயந்தி விழா கடந்த 12-ம் தேதி கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, முன்னதாக பாகிஸ்தானில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் நடைபெறும் விழாவில் இந்திய சீக்கியர்கள் கலந்துகொள்ளும் வகையில், பஞ்சாபில் இருந்து அமைக்கப்பட்ட கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 9ந்தேதி திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, சீக்கியர்களின் புனித தலமான தர்பார் சாகிப் குருத்வாராவிற்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த வழியாக செல்லும் சீக்கியர்கள் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரவிற்கு மட்டும் சென்று வர முடியும். வேறு எந்தவொரு பகுதிகளுக்கும் செல்ல அனுமதி கிடையாது.
இந்த நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித கவுர் என்ற இளம்பெண், பாகிஸ்தானின் பைசாலாபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் முகநூல் வாயிலாக தொடர்பு ஏற்படுத்தி இருவரும் பழகி வந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே பகை நீடித்து வரும் நிலையில், இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பாக கர்தார்புர் சாலை திறக்கப்பட்டத்தை தங்களுக்கு சாதகமாக்க முடிவு செய்தனர்.
அதன்படி கர்தார்பூர் குருத்வாராவிற்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுடன் இணைந்து மஞ்சித் கவுர் கர்தார்புர் குருத்வாரா சென்றுள்ளார். அங்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரும் அங்கு வந்து இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதைத்தொடர்ந்து, மஞ்சித் கவுர் தனது முகநூல் நண்பருடன் பாகிஸ்தான் செல்ல முடிவு செய்து, அவருடன் சென்றுள்ளார்.
ஆனால், அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, மஞ்சித் கவுர் இந்தியர் என்பதை கண்டுபிடித்ததுடன், அவரை பாகிஸ்தானுக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். ஆனால், மஞ்சித் கவுர் தனழ பாகிஸ்தான் நண்பருடன் செல்ல உறுதியாக இருந்த நிலையில், கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான் அதிகாரிகளை அந்த பெண்ணை, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதே வேளையில்,மஞ்சித் கவுரை அழைத்துச்சென்ற பாகிஸ்தான் இளைஞர் மற்றும் அவரது நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரி, கவுர் பாகிஸ்தான் ஆணுடன் செல்ல விரும்பினார், ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடைசெய்யப்பட்ட பகுதியைக் கடக்க விடவில்லை என்று அவர் கூறினார்.