சியாட்டில்:
ட்ரம்ப் அதிபராக பொறுப்புக்கு வந்தபிறகு இந்தியர்கள் மீதான தாக்குதல் அமெரிக்காவில் அதிகரித்துவிட்டது.
அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் பணியாற்றிய தெலங்கானாவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸை, அமெரிக்காவை விட்டு வெளியேறும்படி மர்மநபர் ஒருவர் சிலதினங்களுக்கு முன் அவரை சுட்டுக்கொன்றார். இதையடுத்து கரோலினா என்ற இடத்தில் தொழிலதிபர் ஹர்னிஷ் பட்டேல் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த இனவெறித்தாக்குதல் இத்துடன் நிற்காமல் தற்போது சியாட்டில் நகரத்திலும் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள கென்ட் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெஸ்மித் சிங் என்பவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த முகமூடி ஆசாமி ஒருவர் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுவிடும்படி எச்சரித்துவிட்டு துப்பாக்கியால் சுட்டதாக ஜெஸ்மித் சிங் கூறினார்.
இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், முகமூடி அணிந்த நபர் தன்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக கென்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிபர் ட்ரம்ப் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காதபடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அமெரிக்கவாழ் இந்தியர்களின் கோரிக்கையாக உள்ளது.