ரத சப்தமி என்பது மாசி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப் படுகிறது.    இந்த தினத்தில் தான் சூரியன் உதித்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.   இந்தியக் கலாச்சாரத்தில் சூரியனை வழிபடுவது மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது.   இந்த வருடம் நாளை புதன் கிழமை (23.01.2018)  அன்று ரத சப்தமி கொண்டாடப் படுகிறது.

காஷ்யப முனிவரின் மனைவி பூரண கர்ப்பமாக உள்ள போது ஒரு நாள் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்.   அப்போது கதவைத் தடும் ஓசை கேட்டதும் அவள் சென்று பார்த்தாள்.   அங்கு ஒரு அந்தணர் பசிக்கு சாப்பிட ஏதும் தரச் சொல்லிக் கேட்டார்.   உடனே கொண்டு வருவதாகச் சொன்ன அதிதி பூரண கர்ப்பமாக இருந்ததால் மெதுவாகச் சென்று கணவருக்கு உணவு பரிமாறி முடித்த பின் அந்த அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள்.

அந்தணர் இவள் தாமதமாக வந்ததால் கோபமுற்று இவள் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான் என சாபம் கொடுத்தார்.    அவள் இதனால் அதிர்ச்சி அடைந்து கணவரிடம் விஷயத்தைக் கூறினாள்.    அவர் “இதற்காக வருந்த வேண்டாம்.    நான் அளிக்கும் அமிர்த மந்திரத்தினால் ஒளி பிரகாசமான மகன் உனக்கு பிறப்பான்.   அவன் என்றும் அழிவின்றி வாழ்வான்”  என வரம் அளித்தார்.    அதன் படி அவளுக்கு சூரியன் மகனாக பிறந்தான்.

சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருவதால் ஏழாம் திதியான சப்தமி சூரியனுக்கு உகந்ததாகும் எனவும் மற்றொரு புராணம் தெரிவிக்கிறது.

ரத சப்தமி நாள் அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, கால்களில் இரண்டு, தோள்களில் இரண்டு என வைத்துக் கொண்டு காலை 7.30 மணிக்குள் ஸ்னானம் செய்ய வேண்டும்.    பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளும் எருக்கம் இலையில் அரிசியும் மஞ்சளும் வைத்துக் கொண்டு குளிக்க வேண்டும்.   ஆண்கள் வெறும் அரிசி மட்டும் வைத்தால் போதுமானது.

இந்த நாளில் செய்யப்படும் தானம் மற்றும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இன்று தொடங்கப்படும் தொழில் நன்கு வளரும். மற்றும் கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் கணவனை இழக்கும் நிலை ஏற்படாது என புராணங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. ரத சப்தமி நாளில் சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என புராணங்கள் சொல்கின்றன.