இந்தியாவில் 40 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பயன்பாட்டு கொள்கையால் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
வாட்ஸ்அப் இணையான தகவல் பரிமாற்ற செயலியான ‘சிக்னல்’ செயலியின் தரவிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு சான்றாக உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 46000 பேர் இந்த செயலியை தரவிறக்கம் செய்திருந்த நிலையில், டிசம்பரில் 11 சதம் அதிகரித்து 51000 தரவிறக்கம் செய்யப்பட்டது.
ஜனவரி முதல் வாரத்தில் மட்டும் 2200 பேர் தரவிறக்கம் செய்திருக்கும் நிலையில் இது, டிசம்பர் கடைசி வாரத்தை ஒப்பிடும் போது 38 சதம் அதிகரித்துள்ளது, டிசம்பர் கடைசி வாரத்தில் 1600 பேர் தரவிறக்கம் செய்திருந்தனர்.
சிக்னல் நிறுவனத்தின் துணை நிறுவனரான பிரையன் ஆக்டன் இதற்கு முன் வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனராக இருந்தார், வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து 2017 ல் வெளியேறிய ஆக்டன் இந்த நிறுவனத்தை புதிதாக துவங்கியுள்ளார்.
இவரின், வாட்ஸ்அப்-புக்கு இணையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தகவல் பரிமாற்ற செயலியான சிக்னலுக்கு, ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்ஸி, சமூக செயற்பாட்டாளர் எட்வர்ட் ஸ்னோடென், டெஸ்லா நிறுவன தலைவர் எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர்.
இதன் காரணமாக, வாட்ஸ்அப்-பின் பயன்பாட்டு கொள்கையை ஏற்றுக்கொள்ள விரும்பாத பயனர்கள் அதற்கு மாற்றாக சிக்னல் செயலிக்கு மாறிவருவது அதிகரித்திருக்கிறது, இந்தியாவிலும் அதிகரித்திருப்பது வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.