கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இதுவரை காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னணியில் உள்ள நிலையில் பாஜக 71 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா-வின் நலனுக்காக சித்தராமைய்யா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அவரது மகன் யதிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராக இருந்த சித்தராமைய்யா 2018 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தவிர, 2023 தேர்தலில் பாஜக-வின் ஊழல் மற்றும் நிர்வாக திறமையின்மையை முன்னிறுத்தி மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் தொடர் பிரச்சாரத்தில் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள சூழ்நிலையில் சித்தராமைய்யா-வின் மகன் யதிந்திரா வெளியிட்டிருக்கும் கருத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், பெங்களூரில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கார்கே என்ன முடிவு எடுப்பார் என்பதை கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.