பெங்களூரு

ர்நாடக சட்டப்பேரவையைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என பாஜகவுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 5728 பஞ்சாயத்துகளில் பாஜக சுமார் 3800 பஞ்சாயத்துகளைக் கைப்பற்றி உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  ஏனென்றால் இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி பஞ்சாயத்துக்களைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளது.  ஆனால் பாஜக இதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, “எடியூரப்பா பகல் கனவு காண்கிறார்.  அந்த கனவில் தமது கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதாக கண்டதை உண்மை போல் கூறி வருகிறார்.  இதற்கு காரணம் அவருடைய முதல்வர் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது என்பதே ஆகும்.  தனது நாற்காலியைக் காக்க அவர் 60% பஞ்சாயத்துக்களை பாஜக கைப்பற்ரியதாக் சொல்லிக் கொள்கிறார்,

கர்நாடக சட்டப்பேரவையைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என நான் பாஜகவுக்குச் சவால் விடுகிறேன்.  அவ்வாறு நடந்தால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களைப்  பிடித்து ஆட்சியையும் மீண்டும் கைப்பற்றும்,.  ஊராட்சி தேர்தல்களில் பல இடங்களில் பாஜகவுக்குத் தேர்தலில் நிறுத்தக் கூட ஆள் இல்லாமல் இருந்தனர்.  ஆனால் ஊராட்சி தேர்தலில் எங்கள் கட்சியினர் அதிக அளவில் வென்று நாங்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறோம்” எனக் கூறி உள்ளார்.