சென்னை
காவல்துறை உதவி ஆய்வாளர் சேகர் சமூகவலைத்தளங்களில் அவதூறு கருது பரப்பியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேகர் என்பவர் பணி புரிந்து வந்தார். இவர் முகநூலில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். முகநூலில் ஒரு பதிவாளரின் பதிவுக்கு சேகர் தமிழக அரசைக் கடுமையாகத் தாக்கி பின்னூட்டம் அளித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் தனது பின்னூட்டத்தில், “தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5000 கொடுக்க சொன்னான். வந்தா அதை காணோம். அதை கேளுங்கடா என்றால் புரியாத ஹிந்தி மொழியில் பேசியதை ஏதோ புரிஞ்ச மாதிரி சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை” எனப் பதிந்துள்ளார். இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக அரசு காவல்துறைக்கு அரசு பல நன்மைகள் செய்து வருகையில் ஒரு காவலர் இவ்வாறு பதிவது நியாயமா என ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்குப் பதில், அதற்குப் பதில் என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உரிய விசாரணை நடத்த உத்தரவு இட்டார்.
விசாரணையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சேகர் சர்ச்சைக்குரிய வகையில் பின்னூட்டம் பதிவிட்டிருந்தது உறுதி ஆகியது. எனவே சேகரை பணியிடம் நீக்கம் செய்ய காவல்துறை ஆணையர் நேற்று உத்தரவு இட்டுள்ளார்.