தூத்துக்குடி: விளாத்திக்குளத்தில் மக்கள் சந்திப்பு நடத்திய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும்  தமிழ்நாட்டில் வரவேண்டுமா? விளாத்திக்குளம்  பகுதி பொதுமக்களிடம்  கேள்வி எழுப்பினார்.  முன்னதாக ராமநாதபுரம் மீனவர்களிடையே பேசும் போது, கச்சத்தீவை மீட்கவும், தமிழக நலன், மாநில கோரிக்கைகளுக்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்’’ என்றார்.

“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதிவாரியாக  பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.  முதல்கட்ட பிரசார பயணம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின்போது, விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரையும் சந்தித்து பேசி அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் எடப்பாடியின் சுற்றுப்பயணம் தற்போது  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தவர், மாலையில் விளாத்திக்குளம்  பேருந்து நிலையம் முன்பு  நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதவாது,

இந்த கூட்டத்திற்கு வர தாமதமாகிவிட்டது.  “காலதாமதத்திற்கு பொறுத்தருள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் என பொதுமக்களிடம் கும்பிடு போட்டு மன்னிப்பு கோரியவர்,   இந்த பகுதியில் விவசாயிகள் அதிகம் இருப்பதால்தான் இந்த விவசாயிக்காக காத்து இருந்தது மகிழ்ச்சி. இயற்கை சீற்றங்களின் போது விவசாயிகளுக்கு ரூ.400 கோடி நிவாரணம் தந்தது அதிமுக அரசு.

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கி விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது அதிமுக அரசு ரூ.156 கோடி இழப்பீடாக நிவாரணம் வழங்கியது. அதுமட்டுமின்றி மக்காச்சோளத்தை அமெரிக்கன் படைப்புலுக்கள் தாக்காமல் இருக்க ரூபாய் 45 கோடியில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து வழங்கியதும் அதிமுக தான். விலையில்லா ஆடு, மாடு மக்களுக்கு வழங்கியது அதிமுக அரசு.

விளாத்திகுளம் அதிமுக கோட்டை.  விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் நிலைகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டது அதிமுக அரசு. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வீடு இல்லாத மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது தமிழகத்தின் அகராதியில் ஏழை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்

அது மட்டுமல்ல குடிமராமரத்து பணிகள் செய்யும்போது அதிலிருந்து கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு. விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் ஏற்றம் பெற்றது அதிமுக ஆட்சியில் தான். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும்  அனைத்தையும்  நிறுத்திவிட்டது.

நான் கிராமத்தில் பிறந்தவன் என்பதால் மக்களின் அனைத்து கஷ்டங்களும் எனக்கு தெரியும். உங்களுடன் நான் இருக்கிறேன். ஏழை எளிய மக்கள் பயன்படு வதற்காக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும்.

திமுக ஆட்சியில் தைப்பொங்கலுக்கு வேஷ்டி சேலை முழுமையாக கொடுக்கவில்லை. கவுண்டமணி செந்தில் காமெடி காட்சி போல ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது என்று வழங்கினர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச வேஷ்டி சேலை முழுமையாக வழங்கப்படும். அதுமட்டுமல்ல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை இலவசமாக வழங்கப்படும்.

தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல கொரோனா காலத்தில் ரூ.2500 பொங்கல் பரிசாக அதிமுக அரசு கொடுத்தது. அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என ஏழு லட்சம் பேருக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டது அதிமுக ஆட்சி தான்.

உழவன் செயலி ஆஃப் உருவாக்கி பூச்சி தாக்குதலில் இருந்து காக்க அதில் வழிமுறைகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தன. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரும்புத் தோட்டத்திற்கு கான்கிரீட் போட்டு செல்கிறார்.

அதிமுக ஆட்சியில் சேலம் அருகே ரூ.1000 கோடியில் 1020 ஏக்கரில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு, கால்நடை மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு ரீப்பன் மட்டும் கட் பண்ணினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது குறித்து நான் பேசியதும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
நடைபெறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அம்மா லேப்டாப் கொடுக்கப்பட்டது. அது திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொடரும்.

இப்ப பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சியில் தாமிரபரணி – வைப்பாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்றது. திமுக ஆட்சியில் அது கைவிடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டம்
செயல்படுத்தப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் வீடு வீடாக இன்றைக்கு மக்களுக்கு 46 பிரச்சனைகள் இருப்பதாகவும். மனு கொடுங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஊர் ஊராக சென்று ஒரு பெட்டியில் உங்கள் மனுக்களை போடுங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஏற்கனவே போட்ட மனுவிற்கு பதில் இல்லை. இப்போது தான் மக்களுக்கு பிரச்சனை இருப்பது ஞாபகம் வந்துள்ளது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும். மீண்டும் திமுகவின் குடும்ப ஆட்சி வர விட்டுவிடக்கூடாது என்றவர், திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரவேண்டுமா என பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு அதிமுக தொண்டர்கள் வேண்டாம்… வேண்டாம் என குரல் எழுப்பினர்.

இவ்வாறு பேசினார்.

முன்னதாக நேற்று காலை காலை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் அரண்மனைக்கு சென்றார். சமீபத்தில் அதிமுகவில் இணைந்த சேதுபதி மன்னர் குடும்பத்தை சேர்ந்த முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி மற்றும் அவரது தாயார் லட்சுமி நாச்சியாரை சந்தித்து பேசினார். தொடர்ந்து சேதுபதி சமஸ்தான முறைப்படி விருந்தினரை அழைத்து பேசக் கூடிய இடமான அரண்மனை தர்பார் மண்டபத்தில் அமர்ந்து பேசினார். பின்னர், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பழங்கால கலைநய பொருட்கள், மூலிகை ஓவியங்கள், பழங்கால தொல்லியல் பொருட்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்புற சங்க மீனவர்கள், விவசாய சங்கங்கள், நெசவாளர் சங்கம், ஆடு வளர்ப்போர் சங்கம், வாகன ஓட்டுனர் சங்கம், வழக்கறிஞர் சங்கம், பகுதி நேர ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, அவர்களது குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது எடப்பாடி பேசும்போது, ‘‘கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் சரி செய்யப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்கவும், தமிழக நலன், மாநில கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்’’ என்றார்.

பின்னர் அரண்மனை முன்பு எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அதிமுகவுக்கு தெரிந்த ஒரே ஜாதி ஆண் ஜாதி, பெண் ஜாதி தான். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘எனக்கு விவசாய தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது’’ என்றார். அப்போது ஒருவித பதட்டத்துடன் இருந்தார். வழக்கமாக பேசி முடித்ததும் கூட்டத்தினரை பார்த்து நன்றி சொல்லும் எடப்பாடி, பேச்சின் துவக்கத்திலேயே பணிவாக வணக்கம் தெரிவித்து பேசத் தொடங்கினார்.