புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகமுள்ள மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதங்களில் ஏற்படவுள்ள மருத்துவ வசதி பற்றாக்குறை தொடர்பாக எச்சரித்துள்ளது மத்திய அரசு.
தற்போதைய நிலையில், மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மோசமான கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளன.
இந்நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வரும் நாட்களில் ஏற்படவுள்ள மருத்துவம் சார் பற்றாக்குறை குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதாவது, மேற்கண்ட மாநிலங்களில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஐசியு படுக்கை வசதிகள் மற்றும் வெண்ட்டிலேட்டர்கள் தொடர்பாக ஏற்படக்கூடிய பற்றாக்குறை குறித்து எச்சரித்துள்ளது.
மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களிடம், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கெளபா மேற்கொண்ட வீடியோகான்பரன்ஸ் உரையாடலின்போது சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின் ஒரு பகுதியாகும் இது.
இதன்படி, டெல்லியில், ஜுன் 3ம் தேதியே ஐசியு படுக்கை வசதிகள் தீர்ந்துவிட்டதாகவும், ஜுன் 12ம் தேதியோடு வெண்ட்டிலேட்டர்கள் பற்றாக்குறை நிலவும் எனவும், ஜுன் 25ம் தேதியோடு ஆக்ஸிஜன் வசதிகொண்ட தனியான படுக்கை வசதிகள் முடிந்துபோய்விடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மராட்டியத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 8ம் தேதியோடு ஐசியு படுக்கை வசதிகள் தீர்ந்துவிடும் என்றும், ஜூலை 27ம் தேதியுடன் வெண்ட்டிலேட்டர் வசதிகள் முடிந்துவிடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலோ, ஜூலை 9ம் தேதியோடு ஐசியு படுக்கை வசதிகள் தீர்ந்துவிடும் என்றும், ஜூலை 21ம் தேதியுடன் ஆக்ஸிஜன் வசதிகொண்ட தனியான படுக்கை வசதிகள் முடிந்துபோய்விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற மதிப்பீடுகள், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.