சென்னை:  ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக  தமிழ்நாட்டின் உள்ள  35அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசின் பதிலைத்தொடர்ந்து நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கி உள்ளது.

அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நான்கு மாதங்களுக்குள் குறிப்பிடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிற குறைபாடு களை சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 35 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை பின் பற்றாத 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் கடந்த மே மாதம்  நோட்டீஸ் அனுப்பியது. அதில், 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு முன்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்ற விதியை தொடர்ந்து பதவி உயர்வு மூலம் சில இடங்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் நிரப்பியது.

இந்த நிலையில் தேசிய மருத்துவக் கவுன்சில், தமிழ்நாட்டின் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. எழுத்துப்பூர்வ விளக்கங்களைச் சமர்ப்பிக்க, ஆணையம் கல்லூரிகளுக்கு 7 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரிக்கும் காரணம் கேட்கும் அறிவிப்பு வருவது இதுவே முதல் முறை.

அதில், ஆசிரியர்கள் நியமனம், ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் உள்ள குறைபாடுகளை தெரிவித்துள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் தோல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையும் தெரிவித்துள்ளது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், போதுமான ஆசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்காக, NMC, கல்லூரிகளுக்கு காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 19 துறைகளில் AEBAS இன் பதிவு விவரத்தின் படி, உடற்கூறியல் முதல் கதிரியக்க நோயறிதல் வரையிலான துறைகளில் ஆசிரியர்கள், பற்றாக்குறை இருந்தது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 20 துறைகளில் 8 துறைகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை என தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கையை மேற்கோள் காட்டி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் கல்வி வாரிய தலைவர் சுக்லால் மீனா மே 7-ஆம் தேதி,  இந்த கடிதத்தை அனுப்பியிருந்தார்.  ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர்களுக்கு ஒரு வாரத்திற்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும் விளக்கம் அளிக்காவிட்டால், மருத்துவக் கல்வி தரத்தைப் பராமரித்தல் விதிமுறை, 2023 அத்தியாயம் III-பிரிவு8, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தமிழ்நாடு அரசு வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மாணவர் சேர்க்கை நடைபெறும் காலக்கட்டம் என்பதால், தமிழ்நாடு அரசுக்கும், மாணவர் சேர்க்கையின் போது பெரும் பின்னடைவு ஏற்படுவதற்கும் வாய்ப்பி இருப்பதாக  மருத்துவர்கள் சங்கம் கருத்து  அதிருப்தி தெரிவித்தது.

இதற்கிடையில்,  இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 4-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வந்த உடன் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஆனால்,  தேசிய மருத்துவ ஆணையம்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள், உதவியாளர்கள் இல்லை என குற்றம் சாட்டி இருப்பது, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து,  அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி களுக்கு அங்கீகாரத்தைப் பெற பேராசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் போதுமான அளவு வருகைப்பதிவு இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரி இயக்குநர்  அளித்துள்ள விளக்கத்தில், மருத்துவர்களின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இது முற்றிலும் தவறு. மருத்துவத் துறையில் ஆண்டுதோறும் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு உரிய நேரத்தில் நடத்துவதில்லை. தற்போது பணியிட மாறுதலுக்காக மட்டுமே வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023-க்கான பேராசிரியர்கள் பணி உயர்வு இரண்டு வருடங்கள் கழித்து சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். 2019-இல் அன்றைய அரசு வழங்கிய 354 அரசாணையில் கொடுக்கப்பட்ட கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்பதவிகளை 4D2 அரசாணை மூலம் குறைந்துவிட்டது. அவற்றை மீண்டும் வழங்க கட்டமைப்பு சங்கங்களுடன் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு குறைவான பேராசிரியர்களை வைத்துக்கொண்டு நாட்டிலேயே அதிகமாக 5050 எம்பிபிஎஸ், 2700-க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மாணவர் களை உருவாக்கி சிறப்பான சேவை செய்து வருகிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பத்து மருத்துவக் கல்லூரிகள் இருந்தபோது 5,000 பணியிடங்கள் இருந்தன. தற்சமயம் 35 கல்லூரிகளுக்கு 20,000 பேர் தேவை என்கிற நிலையில் வெறும் 12,000 பணியிடங்களே இருப்பது வேதனையான செய்தி,” என தெரிவித்துள்ளனர்…..

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று, மே மாதத்தில் காரணம் கேட்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிபந்தனை ஒப்புதலை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிற குறைபாடுகளை நான்கு மாதங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 35 கல்லூரிகளும் ஒப்புதல் பெற்றன.

 ஜூலை 8ந்தேதி  நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளும் NMC இடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆதார் செயல்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகை முறையை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகவும், அது சரி செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

2025-2026 கல்வியாண்டிற்கான MBBS மற்றும் BDS படிப்புகளில் சேருவதற்கான மருத்துவ கவுன்சிலிங் நடைபெற உள்ளதால், இந்த ஒப்புதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் உள்ள தேர்வுக் குழு, NMC கவுன்சிலிங் அட்டவணையை வெளியிடுவதற்காகக் காத்திருந்தது. அட்டவணை வெளியிடப்பட்டதும், கவுன்சிலிங் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 72,943 விண்ணப்பங்களை தேர்வுக் குழு பெற்றுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி தேதியாகும். மாநிலத்தில் மொத்தம் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.