சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கம் தீவிரமாகி வருகிறது. இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வெளியில் மறைமுகமாக வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறினால், போதைப்பொருட்களை அரசியல்வாதிகளின் ஆதரவுடன் விற்பனை நடைபெறுவதால், அதை தடுப்பது குதிரைக்கொம்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஹான்ஸ், பான்பராக், குட்கா, பான்மசாலா உள்பட பல வகையான போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்களின் தயாரிப்பு, இருப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையைமீறி விற்பனைகள் படு ஜோராக நடைபெற்று வருகிற். இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க, மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதி காவல் துறையினர் ரோந்துப் பணி, சோதனையில் ஈடுபட்டு அவற்றை விற்பவர்களை கண்டறிந்து கைது செய்தல், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்தி வரும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, உணவு பாதுகாப்புத் துறையினருடன், காவல் துறையினர் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, இருப்பு, கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்கு முன்பு விதிகளுக்குப் புறம்பாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உடனடியாக கடைக்கு சீல் வைக்க முடிவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.