சென்னை: மெரினாவில் கடைகள் அமைக்க உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாபியா கும்பல் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் சான்றிதழ் பெற தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அங்கு அதிகரித்து வரும் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் மட்டும் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 600க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், தங்களையும் இந்த வழக்கில் இணைக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கடற்கரைக்கு அருகில் உள்ள வியாபார மண்டலங்களில் மட்டுமே கடைகள் ஒதுக்க வேண்டும். மெரினாவை வியாபார தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது. கேரளாவின் கோவளம், ஒடிசாவின் புரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்கரைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு மெரினா கடற்கரை, கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர்களிடம் மாமூல் வசூலித்து விட்டு வழக்கில் தற்போது இணைக்க கோரி மனுத் தாக்கல் செய்ததன் பின்னணியில் மாபியா கும்பல் உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அழகான மெரினா கடற்கரையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது. கடற்கரையில் கடைகள் அமைப்பதை உரிமையாக கேட்க முடியாது. சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகள் மூலமும், நாங்களும் நேரில் ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் 300 கடைகள் மட்டும் அமைக்க உத்தரவிட்டோம். வழக்கில் இணைக்க கோரும் இடையீட்டு மனுக்ககள் மீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே நடை பெற்ற விசாரணயின்போது, சென்னை மெரினா கடற்கரையை ஒரு சந்தையாக மாற்ற வேண்டாம் என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
2025ம் ஆண்டு டிசம்பர் 22 அன்று மெரினா கடற்கரையை நேரில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆய்வு செய்தனர். அவர்களுடன் , மாநில அரசு அதிகாரிகள், சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் ஆகியோர் உதவினர்.