மும்பை:
வங்கியில் பணம் இல்லாததால் ஆசிரியர்களுக்கு ரூ. 900 மட்டுமே சம்பளம்
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாததால் ரூ. 900 மட்டுமே சம்பளம் வழங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு வங்கி மும்பை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது….
வங்கியில் கணக்கு வைத்துள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க 95 கோடி ரூபாய் வேண்டும். ஆனால் எங்களுக்கு ரிசர்வ் வங்கி ரூ. 1 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கு 900 ரூபாய் மட்டுமே ஊதியமாக கணக்குகளில் வரவு வைக்க முடியும். இந்த பணத்தை வைத்து ஒரு மாதம் முழுவதும் எப்படி சமாளிக்க முடியும் என அந்த வங்கியின் வக்கீல் வி.எம்.தோரத் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்குவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுக்காமல், அந்த பணம் வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்றும் வக்கீல் தெரிவித்தார்.
வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் பெறலாம் என்று அறிவித்துள்ள நிலையில் ஏன் ஆசிரியர்களால் சம்பளம் எடுக்க முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் பிரச்னை தொடர்பாக ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி அபய் ஒகா தெரிவித்துள்ளார்.