விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மூன்றவரை வயது, அங்கிருந்த மூடி உடைந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள், அவர்களின் உறவினர்கள், தனியார் பள்ளியின் அலட்சியம், காரணமாக, குழந்தையின் மரணத்துக்கு ப காரணம் என்று கூறி பெற்றோர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோக நடவடிக்கை எடுத்தனர்.
இதைத்தொடர்து , கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரொ, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை குறித்து தகவல் அறிந்த முதல்வர், குழந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், குந்தையை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தும், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கியும் உத்தரவிட்டு உள்ளார.
சம்பவத்தன்று, விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள சென் மேரீஸ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப்பள்ளியில் லியா லட்சுமி. 3.5 வயதான இந்த குழந்தை எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று (ஜனவரி 3ந்தேதி) பெற்றோர் வழக்கம்போல குழந்தையை பள்ளியில் விட்டுச் சென்றுள்ளனர். குழந்தையானது மதியம் இடைவேளையின்போது, இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகிலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். பின் கழிவறையில் இருந்து அருகிலுள்ள செப்டிக் டேங்க் பகுதிக்கு அறியாமல் சென்ற குழந்தை லியா, செப்டிக் டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி மீது ஏறியுள்ளார்.
ஆனால், அந்த மூடி துருப்பிடித்து இருந்ததால், குழந்தையின் எடை தாங்காமல் செப்டிங் டேங் மூடி அப்படியே அது இடிந்து உள்ளே விழுந்ள்ளது. இதில் குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் உள்ளே விழுந்து மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்.
சிறுநீர் கழிக்கச் சென்ற குழந்தை நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால், எல்கேஜி ஆசிரியை, அங்குள்ள கழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காததால் பயந்துள்ளார். பிற ஆசிரியர்களோடு சேர்ந்து தேடுகையில், கழிவுநீர் தொட்டியீன் மூடி உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதனுள் தேடியபோது, உள்ளே குழந்தை இறந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் குழந்தை உயிரிழந்ததை விக்கிரவாண்டி போலீசாருக்கும் தீயனைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் தீயனைப்பு துறையினரும் போலீசாரும் குழந்தையை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால். ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்தவுடன், பள்ளிக்கு விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி சார்பில் பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு ‘உங்கள் குழந்தைகளை விரைவாக வந்து அழைத்து செல்லவும்’ என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். என்னவென்று புரியாமல் பெற்றோர்கள் அலறிடித்து கொண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும், பள்ளியில் ஒரு குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம் தெரியவந்ததையடுத்து, பள்ளி வளாகம் முன்பு பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியர் பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டிய பெற்றோர், மற்றும் பள்ளியில் படிக்கும் பிற குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து பள்ளி வாயில் முன்பாக விழுப்புரம் – சென்னை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பெற்றோர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறியலைக் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா நேரில் விசாரனை செய்தனர். தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியும் அளித்தனர்.
இதனிடையே, கழிவுநீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தபின், குழந்தையை ஆசிரியர்கள் மீட்டு காரில் சிகிச்சைக்காக ஏற்றிச் செல்வது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பல ஆயிரம் பணத்தை வாங்கும் தனியார் பள்ளிகள், குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதை ஆய்வு செய்ய வேண்டிய அரசும், அதிகாரிகளும், தங்களது கடமையை செய்வதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதற்கிடையில், செய்தியளார்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமை. குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.
மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.