கொல்கத்தா: அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதால், அதை நம்பியுள்ள ஏராளமான நோயாளிகள் மருத்துவ வசதி இன்றியும், உணவுக்கு தவிப்பதாகவும், இது மனிதாபிமானமற்ற செயல் என மோடி அரசு மீது மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
“அடுத்தவருக்கு காட்டும் பரிவு ஆண்டவனுக்கு செய்யும் உதவி” என்று கூறி, ஏழை எளியோர், நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர் என அனைவரையும் நேசமுடன் அரவணைத்தவர் அன்னை தெரசா. ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசா, அதற்காக தொண்டு நிறுவனம் நடத்திஉதவிகளை செய்துவந்தார்.
அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி ஏழை எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவி வந்தார். அவரது மறைவுக்கு பிறகும், இந்த தொண்டு நிறுவனம், கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என கிறிஸ்தவர்களின் கொண்டாட்ட காலத்தில், தொண்டு நிறுவனத்தை நம்பியுள்ளவர்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை யில், தெரசா மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி நிறுவனம் முடங்கி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘கிறிஸ்துமஸ் அன்று, மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது. அவர்களின் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.
மம்தாவின் குற்றச்சாட்டு மற்றும் தொண்டு நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் முடக்கம் குறித்து கருத்து தெரிவிக்க மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி நிறுவனத்தை முடக்கி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது மத்திய அரசின் வேறு துறைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.