மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஆதித்யா தாக்கரேவை அறிவியுங்கள் என்று சிவசேனா எம்எல்ஏக்கள், கட்சி மேலிடத்தை வலியுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்.

மகாராஷ்டிர சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வென்றது. ஆனால் யார் முதலமைச்சர் என்பதில் இறுதி முடிவு எட்டப்பட வில்லை.

தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக தொடருவார் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆட்சியில் சரிபாதி என்பதில் இருந்து சிவசேனா பின் வாங்காமல் தொடர்ந்து அதே நிலைப்பாட்டில் இருக்கிறது.

ஆட்சி அமைக்க உரிமை கோரும் முன்பு, இந்த விவகாரம் ஒரு சுமூக உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது.  பரபரப்பான சூழலில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் மும்பையில் நடக்கிறது.

கூட்டத்துக்கு வந்திருந்த சிவசேனா எம்எல்ஏக்கள், புதிய முதலமைச்சராக ஆதித்யா தாக்கரேவை அறிவிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை வலியுறுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து பேசிய தானே எம்எல்ஏ பிரதாப் சர்நாயக், மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக நாங்கள் ஆதித்யா தாக்கரேவை பார்க்க வேண்டும். எங்களின் விருப்பத்தை கட்சி மேலிடத்திடம் தெரிவித்து விட்டோம். தலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரியே என்றார்.