டில்லி

மோடியின் அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருவதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே விவசாயிகளின் எவ்வித கோரிக்கையையும்  நிறைவேற்றாமல் இருப்பதாகப் பலரும் குறை கூறி வருகின்றனர்   குறிப்பாக  உணவு தானியங்களுக்குக் குறைந்த பட்ச பரிந்துரை செய்யப்பட்ட விலையை உயர்த்துவதாக பாஜக வாக்களித்திருந்தது.   ஆனால் அதை நிறைவேற்றாமல் உள்ளதால் விவசாயிகள் அரசை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நாடெங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.   தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை எனப் பொருளாகும்.   இந்த நாள் மூலம் மக்களின் துயரம் என்னும் இருள் நீங்கி நன்மை  என்னும் ஒளி பரவும் என்னும் பொருளில் இந்தப் பெயர் அளிக்கப்பட்டுள்ளது.   இந்நாளையொட்டி பல அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துச் செய்தி அளித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “நாட்டில் உள்ள விவசாயிகளின் விளை பொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.   முக்கியமாக துவரை, உளுந்து, சோயா, சூரியகாந்தி விதைகள், எள், சிறுதானியங்கள் ஆகியவற்றுக்குப் பரிந்துரைக்கப்பட்ட விலை கூட கிடைப்பதில்லை.  நெல்லுக்குப் பரிந்துரைக்கப்பட்ட குவிண்டாலுக்கு ரூ.1835 என்னும் விலையை விட ரூ.200 குறைவாகவே  கிடைத்து வருகிறது.

விவசாயிகளுக்கு 50% லாபம் கிடைக்கும் என அறிவித்து ஆட்சியைப் பிடித்த மோடி அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை.  மாறாக இடைத் தரகர்களும் மொத்த வியாபாரிகளும் மட்டுமே விவசாயிகளை விட அதிக லாபம் ஈட்டுகின்றனர்.   இதனால் விவசாயிகளின் விற்பனை விலை 22.5% வரை குறைந்து ரூ.50000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை யார் ஈடு செய்யப் போகின்றனர்?

மோடி அரசின் இந்த செய்கையால் மக்கள் இருண்ட தீபாவளியைச் சந்தித்து வருகின்றனர்.  அவர்களுக்கு இத்தகைய ஒரு தீபாவளியை அளித்து அநீதி பிரதமர் மோடிக்கு நன்றி.  இனியாவது அவர்கள் வாழ்வில் ஒளியைக் காண அரசு விவசாயிகளுக்கு உணவு தானியங்களுக்கான  நியாயமான விலை கிடைக்க உதவ வேண்டும்.  இது தான் அரசு அவர்களுக்கு அளிக்க வேண்டிய உண்மையான நீதி ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.