மும்பை

சிவசேனாவின் தலைவரான உதவ் தாக்கரே தனது தொண்டர்களை பா ஜ க வின் தலைவர்களுக்கு எதிராக போரட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பா ஜ க வும் சிவசேனாவும் நெருங்கிய நட்புடன் இருந்த நிலை தற்போது மாறி உள்ளது.  பா ஜ க வுக்கு எதிராக சிவசேனா செயல்படத் தொடங்கி வருகிறது.   இது அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.  இந்நிலையில் நேற்று ஒரு அவசரக் கூட்டத்தை மும்பையில் சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே கூட்டி உள்ளார்.

அந்தக் கூட்டத்தில் பா ஜ க வுக்கு எதிராக தீவிரமாக செயல் படுமாறு தன் தொண்டர்களை உதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.    அத்துடன் மகாராஷ்டிரா மாநில பா ஜ க தலைவர்களும் அமைச்சர்களும் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் ஊழல் விவரங்கள் அடங்கிய ஒரு புத்தகமும் தொண்டர்களுக்கு அங்கு வழங்கப்பட்டுள்ளது.   இந்த கூட்டத்தில் சிவசேனாவை சேர்ந்த ஆதித்யா தாக்கரே, தீபக் கேசர்கர், சுபாஷ் தேசாய், திவாகர் ரவுத், சஞ்சய் ரவுத் ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில் பா ஜ க கூட்டணியில் இணைந்த நாராயண ராணேவுக்கு அமைச்சர் பதவி அளிக்கலாம் என தகவல் வந்ததை ஒட்டியே சிவசேனா தனது எதிர்ப்பை தீவிரமாக்கி உள்ளதாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   நாராயண ராணே  முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் ஆவார்.  இவர் சிவசேனாவில் இருந்து விலகி தனிக் கட்சியை துவங்கினார்.   அந்தக் கட்சி தற்போது பா ஜ க கூட்டணியில் இணைந்துள்ளது.   அதனால் தான் சிவசேனா – பா க க மோதல் உண்டாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.