மும்பை: எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகள் யாரும் தேவையின்றி கருத்துக்களை வெளியிடக்கூடாது என சிவசேனா மற்றும் பாரதீய ஜனதாக் கட்சிகள் கட்டளையிட்டுள்ளன.
இந்தாண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், முதலமைச்சர் பதவி எந்தக் கட்சிக்கு என்ற விவகாரத்தில், சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தங்கள் கட்சிக்குத்தான் அந்தப் பதவி என்பதாக பேசி வருகின்றனர்.
எனவே, இந்த விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு இரு கட்சிகளின் நிர்வாகிகளிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில், நடைபெறவிருக்கும் தேர்தலில், சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெல்வதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள், முறையே 122 மற்றும் 63 இடங்களைப் பெற்றன. அம்மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 288.
கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்டுள்ளதன் மூலம், தேர்தலுக்கு முன்னரே தேவையற்ற சலசலப்புகள் எழுந்து, அதன்மூலம் இரு கட்சிகளின் தொண்டர்கள் இடையே நிலவ வேண்டிய ஒருங்கிணைப்பு உணர்வை பாதிக்கும் சூழல் தடுக்கப்பட்டுள்ளது.