போபால்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும், மாநிலத்தில் உள்ள கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பசு நல அமைச்சகம் உருவாக்கப்படும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங்  சவுகான் அறிவித்தார். இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்கள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கவும்,  உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால், அதற்கான முயற்சி எடுக்காமல்,  போபால் நகருக்கு 190 கிமீ வடகிழக்கே உள்ள அகர் மால்வா நகரில் உள்ள காமதேனு கோ அபியாரண்யா என்னும் பசுக்கள் சரணாலயம்  அமைக்கப்பட்டது. இதில் 4000 பசுக்கள் வசிக்கின்றன. இந்த சரணாலயத்தை சரிவர நிர்வகிக்காததால், பசுக்கள் மரணம் அடையும் நிகழ்வுகளும் அரங்கேறின. இதையடுத்து, பசு பாதுகாப்புக்காக செலவழிக்க அரசிடம் நிதி இல்லை என கூறி, அட்சயா பாத்ரா என்ற தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பசுக்கள் பாதுகாப்புக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் சவுகான் தெரிவித்து உள்ளார்.  இந்த அமைச்சகத்தில், கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஒரு அங்கமாக இருக்கும் எனவும், கோபாஷ்டமியான வரும் 22ம் தேதி, அகர் மால்வா மாவட்டம் சலரியாவில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என்றும் சவுகான்  தெரிவித்து உள்ளார்.