சென்னை: காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார், முன்னாள் சென்னை மாநகர மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் நாளை பாஜகவில் சேருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆள்பிடிக்கும் வேலையில் தமிழக பாஜக தீவிரமாக இறங்கி உள்ளது. ஏற்கனவே பிரபல ரவுடிகளை கட்சியில் சேர்த்த நிலையில், திமுகவைச் சேர்ந்த சிலரையும் வளைத்து போட்டுள்ளது. தொடர்ந்து மாற்றக்கட்சி நிர்வாகிகளுக்கு தூண்டில் வீசி வருகிறது.
இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம் குமார் நாளை (பிப்ரவரி 11), பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். அதுபோல, சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட முன்னாள் தலைவருமான கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் நாளை பாஜகவில் இணைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவரான ராம்குமார் பாஜகவில் சேர உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ராம்குமார், தந்தை சிவாஜி தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணியில் பொருளாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.