மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தலைநகரை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது. பாஜகவின் பிரிவினை முயற்சிகள் டெல்லி வாக்காளர்களிடம் பலிக்கவில்லை என்று சிவசேனா கருத்துத் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டிய சிவசேனா, “பாஜக தலைவர்களின் ராணுவத்தை“ தனி ஒருவராக நின்று எதிர்கொண்டார் என்றும் அவரது அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் செய்த பணிகளை வெற்றிகரமாக வெளிப்படுத்தினார் என்றும் கூறியது.
“பொதுவாக இந்தியாவில் தேர்தல்கள் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை முன்வைத்தே போட்டியிடுவதால் இம்மாதிரியான வெற்றி மிகவும்அரிதானது என்று சிவசேனாவின் “சமனா“ பத்திரிகையின் தலையங்கம் தெரிவித்துள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமை வகிக்கும் கட்சி, தனது முன்னாள் தோழமைக் கட்சியான பாஜகவை கிண்டலடிக்கும் விதமாக, “ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஆணவம் மற்றும் “நாங்கள் சொல்வது தான் ஆட்சி“ என்ற அணுகுமுறையின் தோல்வியையும் குறிக்கிறது“, என்று குறிப்பிட்டது.
நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையிலும் தோல்வியை சந்தித்திருப்பது, பாஜகவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் கட்சிக்கு ஒரு வெற்றியையாவது பெற்றுத் தர விரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்கும், என்று சிவசேனா கூறியது.
வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த சிவசேனா, “பாஜக பிரிவினை அரசியலை கையில் எடுத்தது, ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை என்று அவர்களுக்கு எதிராக வாக்களிப்பு செய்ததன் மூலம் தெரிவித்து விட்டனர்“, என்றும் கூறியது.