மும்பை,

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகலாம் என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறி உள்ளார். இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியில்லை என்று கூறி, மோடியின் பல்வேறு திட்டங்களுக்கு கூட்டணி கட்சியான சிவசேனை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பா.ஜ.கதான் தங்களின் முதன்மையான எதிரி என்றும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்திக்கு நாட்டை வழி நடத்தும் தகுதி உள்ளதாக ஏற்கனவே தாம் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 25 தொகுதிகளில் போட்டியிடப்போவ தாகவும் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல் முற்றி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்ட்ரா கூட்டணியிலிருந்து சிவசேனா கட்சி விலகவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.   கூட்டணியில் இருந்து கொண்டே எதிர்க்கட்சிகளை போன்று தொடர்ந்து விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது என்றும்,  சிவசேனா விருப்பப்பட்டால் மகாராஷ்ட்ரா கூட்டணி ஆட்சியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இது இரு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.