மும்பை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களை கைதட்டச் சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நம்மால் போரில் வெல்ல முடியாது என்று சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களை அழைத்து கைகளை தட்டச்சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நாம் வெல்ல முடியாது.
பிரதமரின் கோரிக்கைக்கு மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை பல கோணங்களில் இருந்து பார்க்க வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இதுபோன்ற கமாண்டர் தேவை.
வீண் வதந்திகள், திட்டமிடல் இல்லாததால்தான் நாம் பானிபட் போரில் தோற்றோம். கொரோனா வைரசுக்கு எதிரான போரும் அதுபோல் இருந்து விடக்கூடாது, மராத்திய தளபதி சதாசிவராவுக்கு நேர்ந்த கதி மக்களுக்கு வரக்கூடாது.
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் விதிகளை மீற வில்லை, அவர்களை குறை சொல்பவர்களும்தான் சுயதனிமை, சமூக விலகலை பின்பற்றுவதில்லை.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மெழுகுவர்த்தி, விளக்கு, மொபைல் டார்ச் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சாலையில் நடனமாடிச் சென்றவர்களையும், பட்டாசு வெடித்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
அதேபோல வார்தாவில் பாஜக எம்எல்ஏ தாதாராவ் கெச்செ, பிறந்தநாளை இந்த நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மக்களைக் கூட்டி வைத்து கொண்டாடியதும் கண்டிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசம் பல்ராம்பூரில் பாஜக மகளிர் அணித்தலைவியும் இதுபோல் பட்டாசு வெடித்து கொண்டியதும் கண்டிக்கத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.