ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுநர்.. சீறும் சிவசேனா..
பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள், கொஞ்சம் கூடுதலாகவே உரிமை எடுத்துக் கொள்வது வழக்கம்.
பக்கத்துப் புதுச்சேரி- பழைய உதாரணம்.
புதிய எடுத்துக்காட்டு – மகாராஷ்டிரா.
அண்மையில் கொரோனா விவகாரம் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் ,அந்த மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி நடத்திவரும் சிவசேனா, ஆளுநர் நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.
‘’ஆளுநர் தனி அரசாங்கம் நடத்த வேண்டாம்’’ என்று எச்சரித்துள்ளது, சிவசேனா.
அந்த கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’, கட்சி தலைமையின் மனசாட்சியை வெளிப்படுத்தும் ‘அக்னி குஞ்சு’.
பால் தாக்கரே காலம் முதல் இப்போதைய உத்தவ் தாக்கரே காலம் வரை, எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகளை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி விமர்சனம் செய்யத் தவறுவதில்லை- ‘சாம்னா’-
ஆளுநர் செயலை கொஞ்சம் காட்டமாகவே கண்டனம் செய்துள்ளது, அந்த இதழ்.
‘’ கொரோனாவை தடுப்பது குறித்து ஆளுநர் கோஷ்யாரி, மாநில அரசு அலுவலர்களுடன் ஆலோசித்து இருப்பது தேவையில்லாத வேலை. இப்படி, இணை அரசாங்கம் நடத்துவது, அதிகாரிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தும்.’’ என்று, தலையங்கம் தீட்டியுள்ளது, ’சாம்னா’.
‘’ யுத்தம் போன்றதொரு நெருக்கடியான இந்த காலகட்டத்தில், நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க, ஒற்றை தலைமை தான் இருக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளது, சிவசேனாவின் பத்திரிகை.
இது- ’’முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரேயின் குரல் என்பது தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும்’’ என்கிறார்கள், சிவசேனாவினர்.